சென்னை: குருப்-4 தேர்வில் அடங்கிய வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு சான்றிதழ் பதிவேற்ற குறைபாடுகளை சரிசெய்ய டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குருப்-4 பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களின் பதிவேற்றத்தை சரிபார்த்தபோது, சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாகவும், சரியாக பதிவேற்றம் செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஓடிஆர் பதிவேற்றம்: அவர்கள் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்ட சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் தங்களின் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.