சென்னை: தி.நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இடிக்க சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தி.நகர் ஹபிபுல்லா சாலையில் சுரேஷ்பாபு என்பவர் விதிகளை மீறி சட்டவிரோத கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முறையான கட்டிட அனுமதி பெறாமல் முதல் தளத்தை எழுப்பியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட கட்டிடத்தை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில், ‘சம்பந்தப்பட்ட கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அந்த கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டு இருந்தால் உடனடியாக இடிக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.