சென்னை: பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்கக் கோரி, தலைமைச் செயலகத்தை நோக்கி, மாதர் சங்கத்தினர் சென்னையில் பேரணி நடத்தினர்.
தமிழகத்தில் தொடரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி, சென்னை புதுப்பேட்டை எல்.ஜி.சாலையில் நேற்று நடைபெற்றது. பேரணிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ராதிகா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் நாகைமாலி முன்னிலை வகித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
பேரணி குறித்து செய்தியாளர்களிடம் அ.ராதிகா கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த சம்பவங்களில் தமிழக காவல் துறையின் செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. போக்சோ வழக்குகளுக்கு, நீதிமன்ற வழிகாட்டுதலின் படி காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளாமல் தானாகவே ஒரு விசாரணையை நடத்துகின்றனர்.
இதுபோன்ற விசாரணைகள் நடத்தப்படக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய காவல் துறை, குற்றவாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு சமயங்களில் செயல்படுவது ஏற்புடையதல்ல. காவல் துறையின் செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டும். அதேபோல் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை குறித்து விவாதிப்பதற்கு சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வை நடத்த வேண்டும். பாலின சமத்துவக் கல்வியை பாடத் திட்டங்களில் கொண்டுவர வேண்டும்.
குழந்தைகள் மீதான வன்முறையை விசாரிப்பதற்கு தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவர் இல்லை. அவரை உடனடியாக நியமிக்க வேண்டும். சமீபத்தில் அதிகரித்து வரும் சாதி, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகவும், நுண் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தி முறைப்படுத்தவும் தமிழக அரசு தனிச்சட்டங்களை இயற்ற வேண்டும். கோரிக்கைகள் அரசு பரிசீலிக்காத பட்சத்தில் இதுபோன்ற போராட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேரணியில் அனைத்திந்திய சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, துணைச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.