தமிழகம்

தமிழக மாணவர்களுக்கு விரும்பிய மொழியை படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

செய்திப்பிரிவு

பிற மாநில மாணவர்களைப்போல, விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு சார்பில், அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா நெல்லை அருகே செங்குளத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள்' என்ற நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, ஆர்.சிவமுருகன் ஆதித்தன், பி.திருமாறன், பி.செல்வராஜ், எஸ்.ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் ஆளுநர் பேசியதாவது: சனாதனத்தால் உருவாக்கப்பட்டதுதான் பாரதம். பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது. தமிழ் மண் புண்ணிய பூமி. இது பாரதத்தின் ஆன்மிகத் தலைநகராகவும், சனாதன தர்மத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை போதித்த வைகுண்டர் இங்குதான் அவதாரம் எடுத்துள்ளார்.

வெவ்வேறு மொழி பேசுபவர்கள், இனத்தினர், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள் பாரதத்தில் வாழ்ந்தாலும்,அனைவரும் சனாதன குடும்ப உறுப்பினர்கள்தான். சனாதன தர்மத்தில் வேறுபாடுகள் இல்லை. அதைத்தான் அய்யா வைகுண்டர் போதித்தார். அவரது போதனைகள் இப்போது அதிகம் தேவைப்படுகின்றன.

மிகப் பெரிய சனாதனியான பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாரதத்தை ஒரே குடும்பமாக கருதும் பிரதமர் மோடி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். யாரிடமும் அவர் பாகுபாடு காட்டுவதில்லை. தமிழகத்துக்கும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை வழங்கியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்தபோது, தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தமிழகத்துக்கு மட்டும்தான் 8 வந்தே பாரத ரயில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். பல நாடுகளில் வள்ளுவர் பெயரில் இருக்கைகள் அமைத்துள்ளார். தமிழ் பண்பாட்டை உலகம் முழுவதும் மோடி கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், சில சக்திகள் சனாதனத்தின் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் விரும்பவில்லை. ஆங்கிலேயர்களைப்போல பிரிவினைகளை ஏற்படுத்தி, பொய் பிரச்சாரங்கள் மூலம் சனாதனத்தை அழிக்க நினைக்கின்றனர். தமிழகம் விழித்துக் கொள்ள வேண்டும். மொழியைத் திணிப்பதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். நாட்டில் உள்ள மற்ற மாநில மாணவர்களைப்போல விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு துரதிர்ஷ்டவசமாக தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இது நமது மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

அய்யா வழியை பிரதமர் பின்பற்றுகிறார். சமூக நீதி பேசுபவர்கள் அய்யா வழியிலிருந்து விலகிச் செல்ல முடியாது. அய்யா வைகுண்டரின் போதனைகளை பள்ளிப் பாடங்களில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் பேசினார். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு பொருளாளர் எம். ராமநாதன் வரவேற்றார். செயலர் ஜெ.ஜெயசுதன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT