தமிழகம்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீஸார் விசாரணை!

செய்திப்பிரிவு

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் காவல் துறை வழங்கிய சம்மனை ஏற்று இன்று (பிப்.28) இரவு 10 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 11 மணி அளவில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென காவல் துறை சம்மன் அளித்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை காவல் துறை மேற்கொண்டுள்ளது. தற்போது சீமானிடம் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு சீமான் அளிக்கும் பதில் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. காவல் துறையின் இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆகியோர் சீமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்: போலீஸ் விசாரணைக்கு சீமான் ஆஜராகி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை காவல் துறை அமைத்திருந்தது. பாதுகாப்பு கருதி 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காவல் நிலையத்துக்குள் சீமான் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதை கண்டித்து நாதக நிர்வாகிகள் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே வீரப்பன் மகள் வித்யாராணியை பணியில் இருந்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதை கண்டித்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை காவல் நிலையம் செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரினார்.

பின்னணி என்ன? - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் ஒட்டப்​பட்ட சம்மன் கிழிக்​கப்​பட்ட விவகாரத்​தில், பாதுகாவலரை போலீஸார் இழுத்​து சென்​ற​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சீமான் மனு தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம், 12 வாரத்​துக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு உத்தர​விட்​டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்​பிட்​டபடி சீமான் காவல் நிலை​யத்​தில் ஆஜராக​வில்லை.

இதையடுத்து, நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டின் கதவில் வியாழக்கிழமை மீண்​டும் சம்மன் ஒட்டப்​பட்​டது. அதில், பிப். 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. சிறிது நேரத்​தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்​தெறிந்​தார். இதையடுத்து, அவரைக் கைது செய்​வதற்​காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்​ராஜேஷ் மற்றும் போலீ​ஸார் சீமான் வீட்டுக்குச் சென்​றனர்.

அப்போது, சீமான் வீட்​டில் பாது​காவலராகப் பணியாற்றி வரும் ஓய்வு​பெற்ற எல்லை பாது​காப்புப் படை வீரர் அமல்​ராஜ், போலீ​ஸாரை வீட்​டின் உள்ளே ​விடாமல் தடுத்து நிறுத்​தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்​கொண்டு உள்ளே சென்​றார். அப்போது, இரு தரப்​பினரிடையே தள்ளு​முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அமல்​ராஜை போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தால், அவர்​களிடையே மோதல் ஏற்பட்​டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீ​ஸார் அமல்​ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்​துச் சென்று, காவல் துறை ஜீப்​பில் ஏற்றினர்.

இதற்​கிடை​யில், பாது​காவலர் அமல்​ராஜ் வைத்​திருந்த கைத்​துப்​பாக்​கியை நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு அவரிட​மிருந்து போலீ​ஸார் பறிமுதல் செய்​தனர். மேலும், சம்மனை கிழித்​ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்தச் சம்பவம் நடந்த​போது சீமான் மனைவி கயல்​விழி வீட்​டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடு​மாறு முறை​யிட்​டார். கைது செய்​யப்​பட்ட அமல்​ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவு​களில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

‘நான் கைதுக்கு பயப்பட மாட்டேன்’ - சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்ம் கூறும்போது, “காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் அணுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம். எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பாணையை அனைவரும் படிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஒட்டிய அணுகுமுறையே தவறானது. அதேபோல் காவலாளி அமல்ராஜோ உள்ளிட்டோர் அழைப்பாணையை ஒட்டியபோது தடுக்கவில்லை, அப்படி தடுத்திருந்தால் தவறு. இதுபற்றி எனக்கும், எனது மனைவிக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த அழைப்பாணை அங்கு ஏன் இருக்க வேண்டும்.

திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல் தனிபட்ட முறையில் அனைவரையும் எதிர்க்கிறது. இதை பார்க்கும் போது, அந்த பயம் இருகட்டும் என்ற திமிர் தான் தனக்கு ஏற்படுகிறது. அண்ணா பலகலைகழக விவகாரம், சாரயம் காய்ச்சுவது, பள்ளிகளில் போதை பொருள் புழக்கம், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் சட்டம் தன் கடமையை ஏன் செய்யவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை (நடிகை விஜயலட்சுமி) பேச வைத்து பிரச்சினை செய்து வருகிறார்கள். நான் கைதுக்கு பயப்பட மாட்டேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அது முடிந்ததும் இதற்கு முற்று புள்ளி வைக்கபடும்” என்றார்.

SCROLL FOR NEXT