சென்னை: பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம், காலில் அடிபட்ட காயத்துக்காக 6 வயது சிறுமி பாவனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுமி பாவனா உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
குழந்தை பாவனாவுக்கு பெரியார் நகர் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை அரசு பொது மருத்துவமனை அல்லது குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், குழந்தையின் இறப்புக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பெற்றோரின் குற்றச்சாட்டுப் படி பெரியாநகர் அரசு மருத்துவமனை அலட்சியம் தான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது என்பதை முதல்வர் உணர்ந்து கொண்டு தாயுள்ளத்தோடு குழந்தை பாவனாவின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, முதல்வர் ஸ்டாலின் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை முறை அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.