மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் கோரி டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் என 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் வேலையை புறக்கணித்து பணி நிரந்தரம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு தொழிலாளர்களுடன் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளே செல்ல காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அனல் மின் நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் 6 மின் கம்பங்களில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்களை கீழே இறக்கும் வகையில், மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கீழே இறக்கி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அணுமின் நிலையம் வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.