தமிழகம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று நடத்தவிருந்த மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பி்ன் மாநில பொதுச் செயலாளர் சி.பாலச்சந்தர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர் என தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.

எனவே, மி்ன்வாரிய ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, அனைத்து மாவட்ட மின்வாரிய தலைமை அலுவலகங்களிலும் பிப்.28 (இன்று) மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அனுமதி கோரி பிப்.4-ம் தேதி தமிழக டிஜிபிக்கு மனு அளித்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘இந்தப் போராட்டத்துக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவல் அதிகாரிகளிடம்தான் அனுமதி கோர வேண்டும். அதுபோல எந்தவொரு அனுமதியும் மனுதாரர்கள் இதுவரையிலும் பெறவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மின்வாரிய தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT