தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனை மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி மறுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ஏற்கெனவே ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நாகேந்திரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழுவை நியமித்து நாகேந்திரனின் உடலை பரிசோதித்து அறிக்கை அளிக்க சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த முறை உத்தரவிட்டிருந்தது. இந்த அறிக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, வேலூரில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து நாகேந்திரன் தரப்பு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT