தமிழகம்

திருக்கழுக்குன்றத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் கைது

கோ.கார்த்திக்

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர் தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை போலீஸார் வீட்டில் வைத்து கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் நகரப்பகுதியில் வசிப்பவர் தினேஷ்குமார். அதிமுகவின், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு சிலர் அடிக்கடி சிலர் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக, அதிமுக பேரூர் செயலாளர் திருக்கழுகுன்றம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், பேரூர் செயலாளர் தினேஷ்குமார், அவரது உறவினர் மோகனை அந்நபர்கள் அரிவாளால் வெட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார், வெள்ளாளர் தெருவை சேர்ந்த வினோத்குமார் (33), திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கவுரிசங்கர் (எ) அப்பு (29) ஆகியேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அனுமதி இல்லாததால் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ. மரகதம் உள்ளிட்ட அதிமுகவினரை போலீஸார் அவரது வீட்டில் வைத்து கைது செய்ய முயன்றதால் போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருக்கழுக்குன்றம் நோக்கி வரும் அதிமுகவினரை, தடுத்து நிறுத்தி ஆங்காங்கு போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT