கோவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 8.50 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரரராஜன், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
அமித்ஷாவுக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதி நாராயணன் கோயில் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக நவஇந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று அவர் தங்கினார்.
விமான நிலையத்துக்கு வெளியே வழிநெடுகிலும் கட்சியினர் மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். அவர்களைப் பார்த்து காரில் அமர்ந்திருந்த அமித்ஷா உற்சாகமாக கையசைத்து சென்றார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 7 ஆயிரம் போலீஸார் கோவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப் பட்டுள்ள மாநகர் மாவட்ட பாஜக அலுவலக கட்டிடத்தை அமித்ஷா இன்று திறந்து வைக்கிறார். மேலும், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்சி அலுவலகங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். மாலையில் ஈஷா வளாகத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.