தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றுங்கள் என மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டெல்லிக்கு படையெடுத்துச் சென்று மனு கொடுத்துவிட்டு வந்திருக்கும் நிலையில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலிலும் செல்வப்பெருந்தகை தரப்பினர் புகுந்து விளையாடுவதாக புகார் வெடித்திருக்கிறது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஜனவரி 18-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 27-ம் தேதி வரை நடக்கிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்தலில் மாநில தலைவர், பொதுச் செயலாளர், மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி தலைவர்கள், மண்டல தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவுபெற்றவர்கள் 3 அணிகளாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இத்தேர்தலை முறையாக நடத்துவதற்கு சிறப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் நடைமுறைகளை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்களை அதிகளவில் தேர்தலில் வெற்றிபெற வைக்க முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டு வெடித்திருக்கிறது.
இது தொடர்பாக கட்சியின் அகில இந்திய தலைமை வரைக்கும் சிலர் புகார்களை அனுப்பி இருக்கிறார்கள். இருந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களே ஆதங்கப்படுகிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர்களில் சிலர், “ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள், குழப்பங்கள் நடந்துள்ளது. இப்போது அதேபோல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலிலும் முறைகேடுகளை அரங்கேற்றுகிறார்கள். குறிப்பாக, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மாநிலத் தலைவரின் தலையீடும், விதிமீறல்களும் அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு புகார்களை அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு உசிலம்பட்டி சீதா, தனக்கன்குளம் சவுந்தர பாண்டியன், மதுரை திருநகர் வித்யாபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்பதவிக்கான வயது வரம்பு 35. ஆனால், இந்த வயதைக் கடந்த சீதா வேட்பாளராக போட்டியில் இருக்கிறார்.
இதுகுறித்து மாநில தலைவருக்கு புகார் அனுப்பினால் நடவடிக்கை இல்லை. இதையெல்லாம் பார்க்கையில், கண்துடைப்புக்காக தேர்தல் நடத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்கு பேசாமல், தேர்தல் நடத்தாமல் நியமனமே செய்துவிட்டுப் போயிருக்கலாமே” என்றார்கள்.
இதுகுறித்து பேசிய வேட்பாளர் வித்யாபதி, “இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 ஆண்டுக்கு பதவியில் இருக்கலாம். நான் பல வருடங்களாக கட்சியில் இருக்கிறேன். காங்கிரஸ் தியாகியான எனது தாத்தா ராமசாமி நெல்லை நகர்மன்ற தலைவராக பதவி வகித்தவர். எங்கள் குடும்பத்துக்கு இப்படியொரு பாரம்பரியம் இருக்கிறது. மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் உட்பட மூவர் போட்டியில் இருக்கிறோம்.
ஆனால், சீதா என்பவர் ஆவணங்களின் அடிப்படையில் வயது வரம்பைக் கடந்துவிட்டார். இதுகுறித்து செல்வப்பெருந்தகைக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆக, அவர் சீதாவுக்கு சிபாரிசு செய்கிறார் எனத் தெரிகிறது. மதுரையில் மட்டுமின்றி இன்னும் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற விதிமீறல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், தகுதியான நபர்கள் பதவிக்கு வரமுடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்றார்.
இதற்கு பதிலளித்த சீதா, “நான் பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் பணிபுரிகிறேன். பெண்களை அதிகளவில் உறுப்பினர்களாகச் சேர்த்துள்ள எனக்கு தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கவே சிலர் வயதைக் காரணம் காட்டி புகார் அளிக்கின்றனர்.
என்னுடன் தெற்கு மாவட்டத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் 2 ஆண் நண்பர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். மாநிலத் தலைவரும் எனது கட்சி பணிகளை நன்கு அறிந்தவர். யாரும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை. ஒரு பெண்ணை ஜெயிக்க விடக்கூடாது எனக் நினைக்கின்றனர். யார் என்ன சொன்னாலும் களத்தில் போராடி வெற்றிபெறுவேன்” என்று சொன்னார்.