தமிழகம்

போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழக சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல், போதைப் பொருள் உட்பட பல்வேறு வகையான குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக மண்டல ஐஜிக்கள், மாநகர் - பெருநகர் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவர்களின் செயல்பாடுகளை நேரடியாகவும், உளவுத்துறை மூலமும் கண்காணித்து தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கிறார். உத்தரவுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சட்டத்துக்கு உட்பட்டு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும் அதிகளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட போலீஸாரும் அதிக கவனம் செலுத்தி குற்றம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக், சென்னை காவல் ஆணையர் சார்பில் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டனர். மேலும், தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அதே பிரிவு ஐஜி செந்தில்வேலன் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பாலியல் விவகாரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT