தமிழகம்

அம்பத்தூரில் ரூ.4 ஆயிரம் கோடியில் அதிநவீன தகவல் தரவு மையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களின் டிஜிட்டல் சேவைகளை தங்குதடையின்றி வழங்கும் வகையில் சென்னை அம்பத்தூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதிநவீன தகவல் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு தொலைநோக்கு சார்ந்த முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இதன்மூலம் தரவு மையத்துக்கான சந்தையில் தமிழகம், இந்தியாவில் இரண்டாம் இடத்தையும், மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் எதிர்காலத்தில் தரவுகள் தொடர்பான பணிச்சுமைகளை எதிர்கொள்ள ஏதுவாகவும், தமிழகத்தின் குறிக்கோள்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்காகவும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய அதிநவீன தகவல் தரவு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தரவு மையமான ‘CtrlS’ நிறுவனம் சார்பில் சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘நம்ம டேட்டா சென்டர்’ எனப்படும் தகவல் தரவு மைய பூங்கா, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா கிண்டியில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து ‘CtrlS’-ன் சென்னை டேட்டா சென்டர் பூங்காவை திறந்து வைத்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலை வகித்தார்.

தொழில்துறை மதிப்பீடுகளின்படி சென்னை நகரத்தின் தரவு மையத் திறனை 2026-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன், 72 மெகாவாட் கிளவுட் சேமிப்பு திறனுடன் முழுமையான பாதுகாப்பு அம்சங்களோடு, நிலநடுக்கத்தையும், வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் விதமாகவும், தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களின் எதிர்கால டிஜிட்டல் சேவைகளை தங்கு தடையின்றி வழங்கும் வகையிலும் ரூ.4 ஆயிரம் கோடி நேரடி முதலீட்டிலும், ரூ.50 ஆயிரம் கோடி மறைமுக முதலீட்டிலும் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘CtrlS’ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் பின்னப்புரெட்டி பேசும்போது, “சென்னை டேட்டா சென்டர் மூலம் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 9 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து கிளவுட் கம்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, இணையதள தரவுகள், வங்கித் தரவுகள், தொலைக்காட்சி சேனல்கள், பிரபல ஓடிடி தளங்களின் படங்கள் என பலவகையான சேவைகளை இந்த தரவு மையம் வழங்கும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, ‘CtrlS’ நிறுவனத்தின் நிதி அதிகாரி மோகித் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் குத்துச்சண்டை அகாடமி அமைக்க கடந்த 2023, நவ.2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சர்வதேச தரத்தில் 890 பேர் அமர்ந்து விளையாட்டை பார்வையிடும் வகையிலான குளிரூட்டப்பட்ட உள் அரங்கத்துடன், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சியாளர் அறை, பயிற்சி செய்யும் பகுதி, மருத்துவர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டி முடிக்கப்பட்டது.

இதன் திறப்புவிழா சென்னை கோபாலபுரத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து, ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’யை திறந்து வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற 48 முதல் 51 கிலோ எடைப் பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியை பார்வையிட்டு, வெற்றிபெற்ற குத்துச்சண்டை வீராங்கனைக்கு கோப்பையை வழங்கி சிறப்பித்தார்.

SCROLL FOR NEXT