தமிழகம்

நாடாளுமன்ற தொகுதிகளை குறைப்பதா? - மத்திய அரசுக்கு முத்தரசன் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளை, மறுசீரமைப்பு என்கின்ற பெயரால் 31-ஆக குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தியது.

இதனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் மக்கள்தொகை குறைவாக இருக்கிறது. இதைக் காரணம் காட்டி, தமிழகத்தில் 8 நாடாளுமன்ற தொகுதிகளைப் பறிப்பது, மாநிலத்தின் உரிமையை பறிக்கக்கூடிய செயலாகும்.

மத்திய அரசின் தவறுகளை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவதில் தமிழக எம்.பி.க்கள் முன்னிலையில் உள்ளனர். இதனால், தமிழகத்தின் குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக, தொகுதிகளின் எண்ணிக்கை குறைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.

SCROLL FOR NEXT