மதுரையில் சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்தார் | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரை மெட்ரோ ரயில் திட்ட ஆயத்தப் பணி தொடங்க உள்ளதாக மேலாண்மை இயக்குநர் சித்திக்  தகவல்

என்.சன்னாசி

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு முன்பே நில ஆர்ஜிதம் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை தொடங்க உள்ளோம் என்று மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.

மதுரையில் முதல்கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘மெட்ரோ ரயில் திட்டம்’ அமல்படுத்தப்படுகிறது. இதற்கான மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் 6 மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திட்ட பணி தொடங்கும் முன்பே நில ஆர்ஜிதம், மின்சாரம், தண்ணீர் போன்ற ஆயத்த பணிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையில் சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் ஆகியோர் இன்று (பிப்.25) செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரையில் ரூ.13,368 கோடியில் 26 ரயில் நிலையங்களை கொண்ட மெட்ரோ ரயில் திட்ட விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது. தமிழக அரசு பரிந்துரையின்பேரில் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதனிடையே, திட்டத்துக்கான நிலம் ஆர்ஜிதம், மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை உருவாக்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இதற்காக ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்க இருக்கிறோம். இத்திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி அயோக், நிதி துறை போன்ற துறைகளின் கலந்தாய்வுக்கு பிறகே அனுமதி கிடைக்கும்.

ஐந்திரை கி.மீட்டர் தரைத் தளத்திலும், 26.5 கி. மீட்டர் பூமிக்கு மேல் பகுதியிலும் வழித்தடம் அமைக்கப்படுகிறது. தரைத்தளத்தில் வழித்தடம் அமைக்க 4 ஆண்டுக்கு மேலாகும். இதற்கு நில ஆர்ஜிதம் செய்யவே 2 ஆண்டு ஆகும். இதற்கான நிதி குறைவு என்றாலும் நேரம் அதிகம். இதனை குறைக்கும் விதமாகவே முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கிறோம். கோவையை போன்று மதுரையிலும் முன் ஆயத்த பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள இருக்கிறோம்.

கோவை, மதுரைக்கு சேர்ந்தே ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மதுரை பழமையான, தமிழ் கலாச்சாரத்துடன் கூடிய நகரம். இதன் காரணமாக ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் தரைப்பகுதியில் திட்டமிட்டுள்ளோம். மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஸ்டேஷன் அமைகிறது. பாதுகாப்பான முறையில் தரைத்தள வழித்தடம் அமைக்கப்படும். மெட்ரோ வழித்தடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இணைக்க தற்போது வாய்ப்பில்லை.

சிவில் பணி எளிமை.ஆனால் ஒரு ரயில் வாங்கவே குறைந்தது 3 ஆண்டு ஆகும். ரயில் டிசைன் பணிக்கே ஒன்றரை ஆண்டு தேவைப்படும். இன்னும் 6 முதல் 9 மாதத்தில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ திட்டம் நகரத்துக்கான மாஸ்டர் பிளானில் முடிவு செய்யப்படுகிறது. இதன்படியே வழித்தடம் அமைக்க முடியும். பாலம் இடிப்பு, போக்குவரத்து பாதிப்பு இன்றியே வழித்தட பணி இருக்கும்.

பணி தொடங்குவதற்கு முன்பே நேரமின்மையை குறைக்கவே முன்னேற்பாடு பணியை மேற்கொள்கிறோம். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சென்னையில் நிலம் ஆர்ஜிதத்திற்கு மக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. அதுபோன்று மதுரையிலும் ஒத்துழைப்பு இருக்கும் என நம்புகிறோம்" என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, மதுரை திட்ட இயக்குநர் அர்சுனன், மதுரை மாநகராட்சி ஆணையர் விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT