தமிழகம்

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: தமிழக அரசு பள்ளிகளில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படுகிறதா? - ஐகோர்ட்

கி.மகாராஜன்

மதுரை: பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணைபடி பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் பள்ளிக் கல்வி இயக்குநர், சைபர் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு அதிகாரிகள், தலா 2 கல்வியாளர்கள், உளவியலாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கவும், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், பெற்றோர், நிர்வாக பிரதிநிதிகள், ஆசிரியர் அல்லாத அலுவலர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்த ஆலோசனைக்குழு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2021-22 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அதன் பிறகு மறுக்கட்டமைப்பு செய்யப்படவில்லை. இதனால், பள்ளி மாணவர்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உரிய திட்டம் வகுக்கப்படாமல் உள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் பிற வகைகளில் பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான செய்திகள் வரும் நிலையில், அந்தப் புகார்களை பள்ளிகள் வாயிலாக மாநில அளவிலான குழுவுக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பாக அரசு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக் குழு முறையாக செயல்படுவதில்லை.

எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கவும், அரசு பள்ளிகளில் செயல்படும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மறு கட்டமைப்பு செய்யவும, அனைத்து ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிடுகையில், “பள்ளி மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். மாணவர்கள் பாலியல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி அமைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகளில் பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக கேரள அரசு பாடத் திட்டம் வைத்துள்ளது. இதனை அம்மாநில உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. பாலியல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், அரசாணைப்படி பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்காவிட்டால் பலனில்லை. மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு தொடர்பான அரசாணையை முறையாக அமல்படுது்த உத்தாரவிட வேண்டும்,” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவரகள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளதா, அந்தக் குழுக்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT