சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டிடம் கட்ட கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகை விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டிடம் அமைக்க ஏதுவாக கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சோமநாதசுவாமி கோயில் பக்தரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, “அறநிலையத் துறை உரிய விதிகளை பின்பற்றாமல் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கல்லூரி அமைக்க குத்தகைக்கு விட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், இந்த நிலத்துக்கு மாதம் ரூ.5.12 லட்சம் வாடகையாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.3.19 லட்சம் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்,” என கோரியிருந்தார்.
அதற்கு, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “கொளத்தூர் சோமநாதசுவாமி கோயில் நிலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கல்லூரி அமைக்க 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என கடந்த 2022-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது என்ன வழிகாட்டி மதிப்பீடு இருந்ததோ அதன் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை மாற்றியமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வரும் வரும் அக்டோபரில் வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும்,” என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மயிலாப்பூர் கோயில் சார்பில் கொளத்தூர் சோமநாதசுவாமி கோயில் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது என அரசு எடுத்த முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.