தமிழகம்

“மக்களுக்கு முதல்வர் மருந்தகங்கள் பேருதவியாக அமையும்” - முத்தரசன் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு பேருதவியாக அமையும். இதனை வரவேற்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினவிழாவில் அறிவித்தபடி, மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்க, இன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக 2021-ஆம் ஆண்டு முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திறக்கப்படும் முதல்வர் மருந்தகங்கள் மக்களின் மருத்துவச் செலவுகளை பகிர்ந்து கொள்ளும் போது, நோயாளிகள், அவர்களது நோய் தீரும் வரை மருந்து எடுத்துக் கொள்வதை இடைநிறுத்தம் இல்லாமல் பரிபூரண குணமடையும் வரை மருந்துகள் எடுத்துக் கொள்வதை உறுதி செய்யும்.

முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கையை மேலும் கூடுதலாக்கவும், உயிர் காக்கும் முக்கியத்துவம் கொண்ட, அரிதான மருந்துகளும் முதல்வர் மருந்தகங்களில் கிடைக்கவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT