தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் இன்று (பிப்.24) போராட்டம் நடத்தினர்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர். ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள பெயர் பலகை, நடைமேடையில் உள்ள பெயர் பலகை, மின்சார எச்சரிக்கை பலகை போன்றவற்றில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்தனர்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு, இந்தி எழுத்தகளை அழித்தார். அப்போது, இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், தமிழ் வாழ்க என்றும் திமுகவினர் முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.அருள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திரப்பாண்டி, அன்பழகன், வளர்மதி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் ஆலங்குளம் தொலைபேசி நிலையம், அஞ்சல் அலுவலகத்தில் இந்தி எழுத்துகளை திமுகவினர் அழித்து போராட்டம் நடத்தினர்.