தமிழகம்

“ஜெயலலிதாவின் நினைவு என்றென்றும் மக்கள் மனதில் இருக்கும்” - போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த போயஸ் கார்டன் வீட்டுக்கு நான்காவது முறையாக வருகிறேன். 77ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் நான் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அவர் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அப்போது முதல் முறை வந்திருந்தேன். இரண்டாவது முறை என்னுடைய ராகவேந்திரா கல்யாண மண்டப திறப்பு விழாவுக்கு அழைப்பதற்காக வந்திருந்தேன். அதன் பிறகு என் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்.

ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT