தமிழகம்

மனைவி பெயரில் வாங்கிய சொத்துகள் குறித்து தகவல் தெரிவிக்காத நீதிபதிக்கு கட்டாய ஓய்வு அளித்தது சரியே: ஐகோர்ட்

செய்திப்பிரிவு

சென்னை: மனைவி பெயரில் வாங்கிய சொத்துகள் குறித்து முறைப்படி உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு அளித்தது சரியே என வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.குணசேகர் என்பவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2020 ஏப்.20 அன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டு விருப்ப ஓய்வு கேட்டு குணசேகர் அளித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் அவருக்கு 58 வயது பூர்த்தியடைந்ததையடுத்து கடந்த 2021 ஆக.23 அன்று அவருக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான குணசேகர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான குணசேகர் ஆஜராகி, ‘‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியரின் வருவாய் ஆதாரத்தில் இருந்து இல்லாமல் அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற சுற்றறிக்கை, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே எனக்கு கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்து உரிய பணப்பலன்களுடன் விருப்ப ஓய்வு அளிக்க உத்தரவிட வேண்டும்’’, என்றார்.

பதிலுக்கு உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில், ‘‘நீதிமன்ற ஊழியர்களிடம் மோசமான முறையில் நடந்து கொண்டது. மனைவி பெயரில் வாங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ சொகுசு கார் உள்ளிட்ட சொத்து விவரங்களை அவர் உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. அவருடைய சம்பளக் கணக்கில் பெரும் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காகவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாமல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது’’ என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘நீதித்துறை அதிகாரியான மாவட்ட நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்களே. நீதித்துறை அதிகாரிகளை அரசு ஊழியர்களைப் போல கருத முடியாது. பொதுவாக நீதித்துறையில் அங்கம் வகிப்பவர்கள் உச்சபட்ச நேர்மையைப் பிரதிபலிக்க வேண்டும். எனவே மனுதாரருக்கு கட்டாய ஓய்வு அளித்த உயர் நீதிமன்ற முழு அமர்வு நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுவின் முடிவில் தலையிட முடியாது’’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT