தமிழகம்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நிர்வாகி காளியம்மாள் விலகல்?

செய்திப்பிரிவு

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மை காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரையிலான பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகிய வண்ணம் இருக்கின்றனர். இதற்கு அவரவர் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாளும் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக செயற்பாட்டாளராக களப்பணியை தொடங்கிய அவர், நாம் தமிழர் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கட்சியின் கீழ் தீவிரமாக செயல்பட்ட அவருக்கு தலைமையுடன் முரண்பாடு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைய இருப்பதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையிலேயே, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தாரகை கத்பட் எம்.பி. உள்ளிட்டோர் தூத்துக்குடி மணப்பாட்டில் வரும் 2-ம் தேதி நடக்கும் 'உறவுகள் சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் சூழலில், அதே நிகழ்வி்ல் காளியம்மாளும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இதற்கான அழைப்பிதழில் காளியம்மாள் பெயரும் கட்சிப் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என்ற முறையில் இடம்பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்தே அவர் கட்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக அவர் கூறும்போது, "கட்சியில் இருந்து விலகுவது போன்ற சூழல் இருக்கும்போது கட்டாயம் தெரிவிப்பேன்" என்றார்.

SCROLL FOR NEXT