தமிழகம்

மாணவனிடம் பாலியல் அத்துமீறியதாக பொய் புகார்: கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி காவல் ஆணையரிடம் பள்ளி மாணவர்கள் மனு

செய்திப்பிரிவு

சென்னை: மாணவனிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக பொய் புகாரில் கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் காவல் ஆணையரிடம் திரண்டு மனு அளித்தனர்.

சென்னை அசோக்நகரில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவனிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக அப்பள்ளி தமிழ் ஆசிரியர் சுதாகர் (43) அண்மையில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தமிழ் ஆசிரியருக்கு ஆதரவாகவும், அவர் பொய் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று காலை காவல் ஆணையர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், கடந்த ஜனவரி 2-ம் தேதி சம்பந்தப்பட்ட மாணவன் வீட்டுப்பாடம் முடிக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த தமிழ் ஆசிரியர் சுதாகர், மாணவன் முதுகில் அடித்துள்ளார்.

ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: மேலும், தொடையில் கிள்ளவும் செய்துள்ளார். ஜனவரி 3-ம் தேதி பள்ளிக்கு மாணவனின் தந்தை மதுபோதையில் வந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதுஒருபுறம் இருக்க பள்ளி விதியின்படி மாணவர்களை அடிக்க கூடாது என்ற காரணத்தால் ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும், மாணவனின் தந்தை பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியரிடமும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தார். பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து மகனிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக தமிழ் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர். எனவே, ஆசிரியர் மீது பொய் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பதை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT