சென்னை: சென்னையை அடுத்த பையனூரில் உள்ள 90 ஏக்கர் நிலத்தை திரைத்துறையினருக்கு மீண்டும் குத்தகைக்கு விடும் வகையிலான அரசாணையை, திரைப்படச் சங்கத்தினரிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க, உறுப்பினர்கள் நலன்கருதி குடியிருப்பு கட்டிடங்களை கட்டிக்கொள்ள ஏதுவாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க அரசாணை கடந்த 2010-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்ட இந்த அரசாணைப்படி, 3 ஆண்டுகளில் அங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பயனாளிகள் குடியிருப்புகளை கட்ட இயலாத காரணத்தால், கட்டுமானங்களை மேற்கொள்ள அரசாணையை புதுப்பித்து தருமாறு முதல்வரிடம் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் ஆய்வுப்பணிகள், சட்டரீதியான ஆலோசனைகள் உள்ளிட்டவை அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்ட குத்தகை நிலத்தின் பயன்பாட்டை நீட்டித்து, 3 ஆண்டுகளுக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கி புதிய அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதற்கான ஆணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம், சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சினிமா திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “ கலைத்துறையின் முன்னேற்றத்துக்காகவும், திரைக் கலைஞர்களின் நலனிலும் முழு அக்கறையோடு திமுக அரசு எப்போதுமே செயல்பட்டிருக்கிறது. அந்தவகையில் திரைத்துறையினருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள அரசாணையில் திருத்தம் வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையின் முக்கியத்துவத்தை அறிந்து முதல்வர், அரசாணையை புதுப்பிக்க உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய அந்த 90 ஏக்கர் இடத்தின் இன்றைய மதிப்பு ரூ.180 கோடியாகும்.
ஆனாலும் அதே இடத்தை திரைத்துறையினரில் நலன் கருதி, அவர்களிடமே குத்தகைக்கு விட்டிருக்கிறோம். இதன்மூலம் அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை அவர்கள் கட்டிக்கொள்ளலாம். இதனால் 40 ஆயிரம் கலைஞர்கள் பயனடையவுள்ளனர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதுப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம் இடத்தினைப் பெற்ற திரைத்துறைச் சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய்த்துறை செயலர் அமுதா, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் கருணாஸ், பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.