உலக தாய்மொழி தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமையான மொழி மட்டுமல்ல; பிறமொழி துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் ‘தேசிய கல்விக் கொள்கையை’ ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி. தமிழ் மொழியை, தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: தாய்மொழி என்பது தொடர்புக்கு உதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம். தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை. தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழகம் வீழ்த்தியே வந்திருக்கிறது. இனியும் வீழ்த்தும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதேசமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை ‘உள்ளத்தில் தமிழ் - உலகுக்கு ஆங்கிலம்’ என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது. தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தேசிய இனங்களுக்கான உரிமைகளை, அவர்களது மொழி, பண்பாடு ஆகியவற்றை, ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் எந்தவொரு அரசும் இறுதியில் சிதறுண்டு போனதையே உலக வரலாறு நிரூபித்துள்ளது. எனவே, பன்முகத் தன்மையைப் பாதுகாத்திடுங்கள்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.: தமிழரின் தனிப்பெரும் உணர்வாக, உலக மொழிக்கெல்லாம் ஒளிதரும் செம்மொழியாக உதிரத்தில் கலந்துவிட்ட தாய்த்தமிழை போற்றி வணங்குவோம். ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னை தமிழைக் காக்க உறுதியேற்போம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம். இதுவே உலகத் தாய்மொழி நாளில் நமது உறுதி.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் உணர்த்துவதற்காக கொண்டாடப்படும் இந்நாளில், உலகின் மூத்த மொழியாக, தமிழகத்தின் தாய்மொழியாக விளங்கும் தமிழ் மொழியின் மேன்மையை போற்றுவோம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக மக்கள் அனைவருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உலக தாய்மொழி தினத்தையொட்டி, அலுவலர்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.