பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மும்மொழி கற்க உரிமை இல்லையா? - முதல்வருக்கு அரசு பள்ளி மாணவிகளின் கோரிக்கை வீடியோ வைரல்: அதிகாரிகள் விசாரணை

செய்திப்பிரிவு

மும்மொழிக் கல்வி கற்க அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உரிமை இல்லையா என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்து, அரசுப் பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்மொழிக் கல்வி விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர், மும்மொழிக் கல்விக் கொள்கை குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து பேசும் காணொலி நேற்று முன்தினம் முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அந்த மாணவிகள், "தமிழக முதல்வருக்கு வணக்கம். அரசுப் பள்ளி மாணவர்களான எங்களுக்கு, மும்மொழிக் கல்வி கற்க உரிமை இல்லையா?. ஏழை, எளிய மாணவர்களான எங்களுக்கு, அரசுப் பள்ளிகளில் மும்மொழி கற்க வாய்ப்பை வழங்கி அனுமதி தாருங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோவை எடுத்தது யார் என்று பரமக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேதுராமன் தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, "நேற்று முன்தினம் காலை பள்ளி தொடங்கும் முன்பே வீடியோவில் உள்ள 6-ம் வகுப்பு பயிலும் இரட்டை சகோதரிகளான 2 மாணவிகளின் தந்தையே, அந்த வீடியோவைப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. மற்றொரு மாணவியும் 6-ம் வகுப்பு படிக்கிறார். அவர் இரண்டு மாணவிகளின் உறவினர். இதுகுறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

பாஜகவை சேர்ந்தவர்... இந்நிலையில், வீடியோவில் இடம் பெற்ற 3 மாணவிகளில் (இரட்டை சகோதரிகள் தவிர்த்து), மற்றொரு மாணவியின் தந்தையான திமுக பிரமுகர் மாரிச்செல்வம் கூறியதாவது: நான் தெளிச்சாத்தநல்லூர் திமுக கிளைச் செயலாளராக உள்ளேன். பள்ளிக்குச் சென்ற எனது மகளை, பாஜக அனுதாபியான விபூதிசுவரன், அவரது 2 மகள்களுடன் சேர்த்து நிற்க வைத்து, அவரே சொல்லிக் கொடுத்து வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த நான் அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன். அவரது மகள்களை மட்டும் வீடியோ எடுத்தால் பாஜகவைச் சேர்ந்தவரின் மகள்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால், எனது மகளையும் சேர்த்து வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு நானும், எனது உறவினர்களும் விபூதிசுவரனிடம் கண்டனம் தெரிவித்துவிட்டோம்” என்றார்.

SCROLL FOR NEXT