வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜா, நீண்ட நாட்களாக பணிக்குச் செல்லாமல் தலைமறைவானதால், அவரது வீட்டில் போலீஸார் நேற்று நோட்டீஸ் ஒட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் குறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார், கடந்த ஜன. 22-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், வேங்கைவயலைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே, சென்னை உய ர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வேங்கைவயல் தொடர்பான வேறொரு வழக்கில், ஜன.24-ம் தேதி அரசுத் தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதற்குப் பிறகு மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த முரளிராஜா பணிக்குச் செல்லவில்லை என்றும், அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, 21 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து பணிக்கு வராததால், அவரது வீட்டில் 'விட்டோடி' எனும் நோட்டீஸை போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று ஒட்டினர்.