இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட காவலர் 
தமிழகம்

‘நீங்கள் தம்பதியா?’ என கேட்டதால் ஆத்திரம்: மெரினாவில் போலீஸாருடன் இளம்பெண் கடும் வாக்குவாதம் - வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

சென்னை: மெரினா கடற்கரையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் ரோந்து வந்த போலீஸ்காரர் ஒருவர், நீங்கள் கணவன், மனைவியா? என கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள் திரள்வார்கள். ஞாயிறு, அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பலர் நடை பயிற்சியும் மேற்கொள்வார்கள். இதுபோக கடலை ரசிப்பவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் பொழுதை போக்குபவர்கள், காதல் ஜோடிகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் மெரினாவில் குவிவார்கள்.

இதை பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காக போலீஸார் ரோந்து சுற்றி வருவார்கள். மேலும், இரவு 10 மணிக்கு மேல் மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. தடையை மீறி கடற்கரையில் அமர்ந்திருப்பவர்களை போலீஸார் அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைப்பார்கள்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடல் மணல் பரப்பில் ரோந்து போலீஸார் கண்காணித்தனர். அப்போது, கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து இளம் பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதை கவனித்த ரோந்து போலீஸாரில் ஒருவர் அவர்களருகே வந்தார். வந்தவர், ‘நீங்கள் கணவன் மனைவியா? என கேட்டு விசாரணை நடத்த தொடங்கினார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தவாறு, "முதல்ல கணவன், மனைவியான்னு ஏன் சார் கேட்டீங்க? எங்களை ஏன் சார் அப்படி கேட்டீங்க? உங்களுக்கு என்ன தேவை இருக்கு? 2 பேர் உட்கார்ந்திருக்காங்கன்னா, வந்து கணவன் மனைவியான்னுதான் கேட்பீங்களா?

பீச்சில் யாரும் உட்கார கூடாதா? ஒரு ஆணும், பெண்ணும் உட்கார்ந்திருந்தா கணவன், மனைவியா, லவ்வரா என கேட்பீங்களா? அப்படி கேட்டால் அது அநாகரீகம் சார். பீச்சில் கணவன், மனைவிதான் உட்கார வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு பெண்ணும், பையனும் உட்கார்ந்திருந்தால் அது கணவன், மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது சார் என்று அப்பெண், போலீஸாரிடம் ஆவேசமானார்.

இப்படி இருட்டுல உட்காருவது தப்பு என்று போலீஸ்காரர் சொன்னதுமே, "இது இருட்டா சார்?" என செல்போனை வெளிச்சம் நிறைந்திருக்கும் பகுதியை காண்பித்து, அந்த பெண். "நைட் நேரத்தில் எங்கே சார் நாங்கள் உட்கார்திருந்தோம்? இங்கே ஏதாவது அநாகரீகமாக நடந்ததை நீங்க பார்த்தீங்களா?" என்று அந்த பெண் மீண்டும் கோபமானார். இப்படி இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது.

இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை நேரில் அழைத்து போலீஸ் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். ரோந்து போலீஸார் மற்றும் சம்பந்தப்பட்ட இளம் பெண் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. போலீஸார் விசாரணை என்ற பெயரில் கடுமை காட்ட கூடாது. அதே வேளையில் சந்தேக நபர்களை விசாரிக்காமல் கடமையில் இருந்தும் தவற கூடாது.

அதேபோல் சம்பந்தப்பட்ட பெண் தனது உரிமையை நிலை நிறுத்தி பேசி உள்ளார் என்றும், இருப்பினும், போலீஸாரின் பாதுகாப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இருவேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. குற்ற சம்பவமும் நடந்து விடக்கூடாது, யாருடைய உரிமையும் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற வகையில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT