தமிழகம்

‘தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள்..' - அண்ணாமலைக்கு உதயநிதி சவால்

செய்திப்பிரிவு

தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்க என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றால் ‘கெட்-அவுட் மோடி’ என்று கூறி, பிரதமரை துரத்துவோம்” என்று பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலினுக்கு உலகத் தலைவரை மதிக்கத் தெரியவில்லை. அவர் சரியான ஆளாக இருந்தால் அவரது வாயில் இருந்து ‘கெட்-அவுட் மோடி’ என்று சொல்லட்டும் பார்க்கலாம். நானே அவரது வீட்டுக்கு சென்று ‘பால்டாயில் பாபு’ என போஸ்டர் ஒட்டுவேன்” என்றார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று இலவச வீட்டுமனை பட்டாவழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தப் பிரச்சினையை திசைதிருப்பும் வகையில் அண்ணாமலை பேசு வருகிறார். அவர் என்னை ஒருமையில் பேசுவது, அவரது தரத்தைக் கட்டுகிறது. மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை வாங்கித் தர துப்பில்லை. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள்.

தமிழகத்தின் நிதி உரிமையை மீட்டுத் தர வேண்டும். அதற்கு உபயோகமாக எதாவது செய்ய முடிந்தால், அவரை செய்யச் சொல்லுங்கள். 2018-ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டதால், மக்களை சந்திக்க பயந்துகொண்டு, சுவரை எல்லாம் உடைத்துக்கொண்டு திரும்பிச் சென்றார். இதெல்லாம் அண்ணாமலைக்கு நியாபகம் இருக்குமா? எனது வீட்டை முற்றுகையிடப் போவதாகவும், வீட்டின் சுவரில் சுவரொட்டி ஒட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

நான் வீட்டில்தான் இருப்பேன். முடிந்தால் வரச் சொல்லுங்கள். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் ஏதோ செய்வதாகக் கூறியிருந்தார். அவருக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் எதுவும் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை. மத்திய அரசின் அனுமதி வாங்கித்தான் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் இலவசமாக உணவு, உடை வழங்கப்படுகிறதா? எனவே, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளையும் ஒப்பிட வேண்டாம். இவ்வாறு உதயநிதி கூறினார்.

SCROLL FOR NEXT