கட்சித் தலைவர்கள், கட்சிக் கொடிகளை பொது இடங்களுக்குப் பதிலாக, சொந்த அலுவலகங்களில் வைத்துக் கொள்ளுங்கள் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் குடவாசல் சாலையில் நாச்சியார் கோயில் குளக்கரை பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் சிலை மற்றும் அதிமுக கொடி அமைக்கப்பட்டது. இந்த சிலை மற்றும் கொடிக்கம்பம் மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் உள்ளன.
இந்நிலையில், எம்ஜிஆர் சிலை மற்றும் அதிமுக கொடியை அகற்றுமாறு கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பொறியியல் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக மற்றும் பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் சிலையை தன்னிச்சையாக அகற்றக் கூடாது. எனவே, எம்ஜிஆர் சிலை மற்றும் அதிமுக கொடியை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "எந்தக் கட்சியாக இருந்தாலும் கட்சித் தலைவர்களின் சிலைகள் மற்றும் கட்சிக் கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? பொது இடங்களில் சிலை, கொடிகள் வைப்பதை ஏற்க முடியாது. எந்த கட்சி, அமைப்பாக இருந்தாலும் கட்டாயம் அனுமதிக்க முடியாது. இதனால் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போகிறோம்" என்றனர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.