புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக சார்பில் அஞ்சலையம்மாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. “தமிழக அரசியலில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்துக்கு விஜய் வந்துவிட்டதாக,” இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சவுந்தரராஜன் கூறினார்.
புதுவையில் மரப்பாலம், அண்ணாசிலை, அண்ணாசாலை ஆகிய இடங்களில் அஞ்சலையம்மாள் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி இன்று (பிப்.20) செலுத்தப்பட்டது. மரப்பாலத்தில் நடந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சவுந்தர்ராஜன் பங்கேற்று அஞ்சலையம்மாள் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில் நடிகர் சவுந்தரராஜன் பங்கேற்று பேசியதாவது: “தவெக தலைவர் விஜய்யின் குரலுக்கு நல்ல மதிப்புள்ளது. விஜய் பேசியிருக்காவிட்டால், அஞ்சலையம்மாள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. ஆணும், பெண்ணும் சமம் என்பதை செயல்படுத்தி காட்டியுள்ளார்,” என்று பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மின்கட்டணம் கடுமையாக பல மடங்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள். நமது எதிர்ப்புகளை அகிம்சை வழியிலும் தெரிவிக்கலாம். போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து கட்சியின் தலைவர் விஜய்தான் முடிவு எடுப்பார்.
வெளிநாடுகளில் தலைவர்கள் வாக்குறுதிகளைத் தந்து வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்வார்கள். வெளிநாட்டில் அரசியல் களம் அப்படிதான் இருக்கும். 75 ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்கிறோம். மாற்றம் வேண்டும் என நினைப்போர் விஜய்க்கு வாக்களிப்பார்கள். புதுச்சேரியை முன்னிலைப்படுத்தவில்லை என்று கேட்கிறீர்கள் இங்குள்ள பிரச்சினைகள் அறிந்து அதற்கேற்ற வரையறைகளை கட்சியினர் கொண்டு வருவார்கள்.
தமிழக அரசியலில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்துக்கு விஜய் வந்துவிட்டார். தனித்தே வெல்லும் அளவுக்கு வளர்ந்து வருகிறோம். கூட்டணிபற்றி தலைவர்கள்தான் கூறுவார்கள். தேர்தலையொட்டி முன்திட்டமிடல் தற்போது கட்சியில் நடந்து வருகிறது. விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். தற்போது கட்சியினருக்கு பதவிகள் தரப்பட்டு வருகிறது." என்றார்.
முன்னதாக, புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளில், “வாழ்வினில் செம்மையை” என்ற பாரதிதாசன் பாடல்தான் தமிழ்தாய் வாழ்த்து பாடலாக இசைக்கப்படும். ஆனால் தவெக சார்பில் தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதேபோல், நிகழ்ச்சி தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பேனரில் அன்னதானம் என்பதற்கு பதிலாக அண்ணதானம் என தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.