சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை எளிதாக விசாரிக்கும் வகையில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெககனேஷன்’ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தீர்ப்புகளை விரைவாகப் பெற முடியும் என மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. இதில் தற்போது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுடன் சேர்த்து மொத்தம் 65 நீதிபதிகள்பணியில் உள்ளனர். 10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தக் காலியிடங்களை நிரப்பஉச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற கொலீஜியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தை ‘பேப்பர்-லெஸ்’ டிஜிட்டல் நீதிமன்றமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக வழக்கு விவரங்கள், நீதிமன்றதீர்ப்புகள், முந்தைய ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பது 10 சதவீதம் என்றால் மீதமுள்ள 90 சதவீதம் வழக்கு ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. ஒரு வழக்கு பண்டல் ரெக்கார்டு ரூமில் இருந்து நீதிமன்ற அறைக்கு வரும்போது அங்கு நீதிபதி உத்தரவுகளைசரிபார்த்ததும் நீதிபதியின் உதவியாளரிடம் செல்லும், அதை உதவியாளர் சரிபார்த்து மீண்டும் கையெழுத்துக்காக நீதிபதியிடம் அனுப்பிவைப்பார். அங்கிருந்து காப்பிஸ்ட் எனப்படும் நகலகப் பிரிவுக்கு சென்று பின்னர், அங்கிருந்து டெஸ்பேட்ஜ் பிரிவுக்குச் செல்லும்.
அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அந்த பண்டல்செல்லும். உயர் நீதிமன்றத்தில் ஆங்கில ரெக்கார்டு ரூம், வெர்னாகுலர் ரெக்கார்டு என 2 பாதுகாப்பு அறைகள் உள்ளன. பழைய வழக்குகளின் கட்டுகள் என்றால் அதற்கு தனியாக அறை உள்ளது. இவ்வாறு கட்டுகள் ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு செல்லும் போது அவற்றை கண்காணிக்க ‘மூவ்மெண்ட் ரிஜிஸ்டர்’ கையாளப்படுகிறது.
இதன்மூலம் அந்த கேஸ் பண்டல் எங்கு இருக்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியும். இதையும் மீறி சில நேரங்களில் கேஸ்கட்டுகள் மாயமாவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளை டிஜிட்டல் மயமாக்கி பென்-டிரைவ், லேப்-டாப், மெகா ஸ்கிரீன் மூலமாக நவீன தொழில்நுட்பத்தின் பலனாக உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஹை-டெக் வடிவம் பெற்றுள்ளது.
குறிப்பாக நீதிபதிகள் வழக்கு ஆவணங்களை ‘டச் ஸ்கிரீனிலேயே பார்த்து எளிதாக விசாரணை மேற்கொள்ளும் வகையில் டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெககனேஷன்’ தொழில்நுட்பம் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் சில அமர்வுகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பார்வையிட தனித்தனியாக மெகா ‘டிஜிட்டல்- ஸ்கிரீன்கள்’ நீதிமன்ற அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நீதிபதி வழக்கின் எந்த ஆவணங்களைப் பார்க்கிறார், எந்த பக்கத்தில் இருந்து கேள்வி எழுப்புகிறார் என்பதை வழக்கறிஞர்கள் ஸ்கிரீனில் பார்வையிட்டு எளிதாக பதிலளிக்க முடியும்.
அதேபோல நீதிபதி வாய்மொழியாக பிறப்பிக்கும் தீர்ப்பு கணினியில் தானாக பதிவாகும் என்பதால் நீதிபதிகளின் பிஏ-க்கள் தீர்ப்பு விவரங்களை அவசர கதியில் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து பின்னர் அதை கணினியில் பதிவேற்றம் செய்யும் நேரம் மிச்சமாகும். இந்த தொழில்நுட்பத்தால் தீர்ப்புகளை விரைவாக சரிபார்த்து அவற்றை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய முடியும்.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது: உலகம் முழுவதும் ஏஐ (ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் தற்போது பிரதானமாக இருந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் நீதித்துறையிலும் இந்த தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்ய வேண்டும். குறிப்பாக அகில இந்திய அளவிலான தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவதற்கும், கேஸ்-லாஸ் எனப்படும் முன்மாதிரி தீர்ப்புகளை பட்டியலிடவும் இந்த ஏஐ தொழில்நுட்பம் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் பேருதவி புரியும். அதன் முன்னோட்டமாக தற்போது டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெககனேஷன்’ தொழில் நுட்பத்தை நீதிபதிகள் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் வழக்கு விசாரணை இலகுவாகும். காலவிரயம் மட்டுமின்றி நீதிமன்ற பணிச்சுமையும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும். இவ்வாறு தெரிவித்தனர்.