ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் அடிக்கடி கூறிக் கொள்கிறார். 2010-ல் முல்லை பெரியாறு உரிமை போராட்டத்துக்கு அவரை நம்பாமல், என்னை தலைமை வகிக்கச் செய்தார் ஜெயலலிதா. பலமுறை ஓ.பன்னீர்செல்வத்தை வைத்துவிட்டு, அவரது மாவட்டத்துக்கு என்னை அனுப்பினார் ஜெயலலிதா.
தனது கடைசிகாலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அப்போது, ஓபிஎஸ் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி என்னிடம் ஜெயலலிதா பகிர்ந்து கொண்டார். அதை நான் வெளியே சொன்னால், அரசியல் நாகரிகமாக இருக்காது.
நான் கட்சித் தலைமை மீது வைத்துள்ள விஸ்வாசம் மீது நீங்கள் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை, என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்றால், அதற்காக எந்த எல்லைக்கும் செல்வீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்று கட்சி வேட்டிகூட உங்களால் கட்ட முடியவில்லை. இதற்கெல்லாம் நீங்களே காரணம். எனக்கு எச்சரிக்கை விடுக்கும் தகுதி உங்களுக்கு இல்லை. இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால், நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார்.