திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்துக்குள் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள். படம்: நா.தங்கரத்தினம் 
தமிழகம்

அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் தாக்குதல்: காவல் நிலையத்துக்குள் வழக்கறிஞர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் வழக்கறிஞரை தாக்கியதை கண்டித்து, திண்டுக்கல்லில் காவல் நிலையத்துக்குள் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க சென்ற வழக்கறிஞர் உதயகுமாரை, அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் மற்றும் கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நநலையில், நேற்று காலை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய வரவேற்புப் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் நிலையத்துக்கு உள்ளேயே சென்று போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், வழக்கறிஞர் உதயகுமார் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி திமுக கவுன்சிலர் சுபாஷ், அமைச்சரின் பாதுகாப்பு எஸ்.எஸ்.ஐ. ரவி உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, காவல் நிலையத்திலேயே காத்திருந்தனர்.

நேற்று மாலை காவல் நிலையத்திலேயே வழக்கறிஞர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. சங்கச் செயலாளர் கென்னடி செய்தியாளர்களிடம் கூறும்போது, "வழக்கறிஞர் உதயகுமாரை தாக்கியவர்கள் கைது செய்யப்படும் வரை தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம். காவல் துறையினரை நீதிமன்ற வளாகத்தில் அனுமதிப்பதில்லை என்றும், வரும் வெள்ளிக்கிழமை காலை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT