சென்னை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்தை தினம் தினம் விசாரணைக்கு அழைத்து அலைகழிக்கும் காவல் துறையின் செயலை வன்மையாக கண்டிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 14ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரத்தில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாகவும், கோவை துடியலூர் பகுதியில் நடு ரோட்டில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது சம்பந்தமாகவும் பேசினார்.
இதையடுத்து நேற்று முன்தினம் (பிப்.16) ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் மாநிலத் தலைவருக்கு எதிராக அவசரகதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உடனடியாக அவர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்து முன்னணி மாநில தலைவர் நேற்று ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், மறுநாளும் விசாரணைக்கு வர வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஒரு மாபெரும் இயக்கத்தின் மாநில தலைவரை வேண்டுமென்றே, தினமும் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி விசாரணை நடத்துவது, தமிழகம் முழுவதும் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் செயலாகும். காவல்துறையின் இத்தகைய செயல் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும். திமுக அரசு தனது இந்து விரோத போக்கை தொடர்ந்து வெவ்வேறு முகங்கள் மூலமாகக் காட்டி வருகிறது. சம்மன் அனுப்புவது, வழக்கு போட்டு மிரட்டுவது என தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி இந்து முன்னணியின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று கனவு காண்கிறது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், இந்து முன்னணி பேரியக்கம் நடத்திய மாபெரும் அறவழிப் போராட்டத்தை தடை செய்ய 144 தடை உத்தரவை பிறப்பித்தது திமுக அரசு. இந்து முன்னணி தலைவர்கள் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதையெல்லாம் தாண்டியும் நீதிமன்ற உத்தரவு கிடைத்த சிறிது நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க அரசு தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி பிரமுகர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
ஐயப்பனை பற்றி இழிவுபடுத்தும் விதமாக பாடல் பாடிய இசைவாணி என்பவர் மீது தமிழகம் முழுவதும் இந்துக்கள் பலர் புகார் அளித்திருந்தனர். அந்த வழக்கில் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த ஜனவரி 19ஆம் தேதி, எஸ்.டி.பி.ஐ. கட்சி, கோவை ஆத்து பாலத்தில் வக்பு வாரியம் தொடர்பாக ஒரு மாநாட்டை நடத்தியது. பேரணி, ஊர்வலம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுவதாக அந்த மாநாடு அமைந்தது.
அதோடு, அந்த மாநாட்டில் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், கலவரத்தை தூண்டுகின்ற வகையில் பேசினார். அவர் மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்து முன்னணி தலைவர் மட்டும் மதகலவரத்தை தூண்டும் விதமாக பேசினார் என்று பொய் வழக்கு பதிவு செய்திருக்கிறது தமிழக காவல் துறை. கோவையில் இறந்து போன பயங்கரவாதி அல்-உம்மா இயக்கத் தலைவன் பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு 5 கிலோ மீட்டர் வரை செல்ல அனுமதித்தது, கோவை மாநகர காவல் துறை. இப்படியாக தமிழகத்தில் வன்முறைக்கு வித்திடும் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப் பொருள்களின் கூடாரமாகவும், ரவுடிகளின் ராஜ்ஜியமாகவும் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற வாசலிலேயே கொலை செய்வது, பட்டப் பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொள்வது, கள்ளச்சாரய விற்பனையை தட்டி கேட்ட இருவரை கொலை செய்வது என சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போய் இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்காமல் இந்துக்களின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்து முன்னணியினர் மீது பல்வேறு பொய் வழக்குகளை திமுகவின் தூண்டுதலின் பேரில் காவல் துறை பதிவு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மீது கோவை மாநகர காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒரு நாள் விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து, தினம் தினம் அவரை விசாரணைக்கு அழைத்து அலைகழிக்கும் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் இந்துக்களின் எழுச்சியையோ, இந்து முன்னணியின் வளர்ச்சியையோ இந்து விரோத திமுக அரசால் தடை செய்ய முடியாது என்பதை திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக, பாரபட்சமாக பணி செய்யாமல் நியாயமான முறையில், பணி செய்ய வேண்டுமென இந்துமுன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.