தமிழகம்

இந்தியாவில் ‘விகடன்’ இணையதளம் முடக்கம் - மத்திய அரசின் உத்தரவும் பின்னணியும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் (www.vikatan.com) கடந்த 15-ம் தேதி முடக்கப்பட்டது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக, இது தொடர்பான உத்தரவை அறிந்த மூவர், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், இது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், "பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார். இணையதளத்தை முடக்க மத்திய அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்று குறிப்பாகக் கேட்டபோது, ​"விரைவில் ஏதாவது சொல்வார்கள்" என தெரிவித்தார்.

இதனிடையே, "விகடன் பிளஸ் அச்சில் கிடைக்கிறதா என்று விசாரிக்க இந்திய பத்திரிகை அலுவலகத்தின் அதிகாரிகள் விகடன் அலுவலகத்துக்கு வந்தனர்" என்று விகடன் தனது வலைத்தள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும், "என்றைக்குமே குறிப்பிட்ட ஒரு தரப்பை மட்டுமே ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ விகடன் செயல்பட்டதில்லை. சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக பொதுமக்களின் பக்கம் நின்று, அறத்தின் குரலாக எந்தவித விருப்பு வெறுப்பின்றி பல கார்ட்டூன்களை வெளியிட்டிருக்கிறோம்" என்றும் விகடன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விகடன் இணையதளம் முடக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. | வாசிக்க >
விகடன் இணையதளம் முடக்கம்: தலைவர்கள் கண்டனமும், பின்னணியும் என்ன?

SCROLL FOR NEXT