தஞ்சாவூர்: நெல்லின் ஈரப்பதம் தளர்வு குறித்து டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி ஒரு மாதம் ஆகியும், இதுவரை அதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால், மத்திய ஆய்வுக் குழுவின் மீது டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து, அதை இந்திய உணவு கழகத்துக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் பெய்த மழை மற்றும் பனியின் காரணமாக நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜன.22-ம் தேதி மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து கள ஆய்வு செய்து, அதன் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அப்போது, இதுதொடர்பாக ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கு விரைவில் வழங்குவோம் என ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், மத்திய குழுவினர் ஆய்வுக்கு வந்து சென்று, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும், ஈரப்பதம் குறித்து இன்னும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால், ஆய்வுக் குழுவினர் மீது டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி உரிமை விவசாயிகளின் செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார் கூறியது: ஒவ்வொரு ஆண்டும் மழை, பனிக் காலங்களில் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஈரப்பதத்தை வானிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக தமிழக அரசின் வேண்டுகோளின்படி மத்திய குழுவினர் வருகை வந்து, ஆய்வு செய்கின்றனர். ஆனால், அறிக்கை மட்டும் வெளியிடுவதில்லை. இதனால், இந்த ஆய்வு என்பது ஒரு சம்பிரதாயமாக நடைபெறுகிறதோ என கருத வேண்டியுள்ளது.
தற்போது இரவு நேரங்களில் பனி அதிகமாக இருப்பதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஈரப்பத பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய குழுவின் அறிக்கையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எனவே, நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி, அதற்கான நிரந்தர கொள்கை முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை தொடங்கியபோது, ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆனால் தற்போது அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல, கொள்முதல் பணியும் அதிகரித்துள்ளது. இதுவரை தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 1.90 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்துள்ளது. அதேபோல 2 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 60 சதவீத அறுவடையும், கொள்முதல் பணியும் முடிவடைந்துள்ளது’’ என்றனர்.