மாணவி மீதான பாலியல் அத்துமீறல் சம்பவத்தை கண்டித்து, சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பாலியல் அத்துமீறலால் மாணவி பாதிப்பு: மாணவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவிக்கு நடந்த பாலியல் அத்துமீறலை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள சி .முட்லூரில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இரு வேளை பாட பிரிவுகளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வேதியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம் கல்லூரியில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைதொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சௌமியா தலைமையில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு ஆய்வக உதவியாளர் சிதம்பரநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் அத்துமீறல் சம்பவத்தைக் கண்டித்து சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கல்லூரியில் உட்புற கமிட்டி அமைக்க வேண்டும், மேலும் சில மாணவிகளிடம் ஆசிரியர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சௌமியா, மாநில துணைத்தலைவர் குமரவேல், மற்றும் சிவநந்தினி, கல்லூரி கிளை தலைவர் உதயா, செயலாளர் அன்பு உள்ளிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT