பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை, ஈரோடு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த சீமான், வழக்குகள் போட்டு அலைக்கழிக்க தமிழக அரசு திட்டமிடுவதாக குற்றம்சாட்டினார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகளுக்கு எதிராக திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள் மூலம் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து பல காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராக வடலூர் மற்றும் ராணிப்பேட்டை போலீஸார் சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த வடலூர் மற்றும் ராணிப்பேட்டை போலீஸார் சீமானை விசாரணைக்கு ஆஜராக கோரி நேரில் சம்மன் வழங்கினர். அதைத்தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டை வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு போலீஸார் முன்பு பிப். 20-ம் தேதி ஆஜராகவும் சீமானுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: என் மீது எல்லா இடங்களிலும் வழக்கை போட்டு அலைய வைத்து ஒரு மனச்சோர்வை எனக்கு உண்டாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. இதற்கெல்லாம் சோர்வடையும் ஆள் நானில்லை. இதுபோன்று பலவற்றை பார்த்திருக்கிறேன். இதற்கு அச்சப்படுகிறவன் முதலில் களத்துக்கே வரக்கூடாது. என் மீது எத்தனை வழக்கு வேண்டுமானால் போடட்டும். எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன். ஒரே காரணங்களுக்காக போடப்பட்ட இந்த வழக்குகளை எல்லாம் ஒரே இடத்தில் ஒரே நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து விசாரிக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.