மதுரை: சாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஓய்வூதியம் கோரி மனு அளித்தால், அந்த மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த கருப்பையா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “தமிழகத்தில் சாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 2024 பிப்ரவரி மாதம் வரை 49 பேர் மாதம் ரூ.13,200 வரை பெற்றுள்ளனர். இந்தத் தொகை தற்போது ரூ.7500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரிக்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இதனால் சாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே சாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களில் தகுதியுடையவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து. ஓய்வூதியம் என்பது தனிநபர் உரிமை. அது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தான் கேட்க வேண்டும். சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அதிகாரிகளிடம் மனு கொடுக்க வேண்டும். அந்த மனுக்களை அதிகாரிகள் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.