சென்னை: தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், அவரது உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து சென்றனர். துரைமுருகன் நலமுடன் இருப்பதாகவும், அவர் செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுக பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். 86 வயதாகும் அவருக்கு வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார். சில நாட்களாக லேசான சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், முக்கியமான அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.