ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கியதைக் கண்டித்து பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.சாமி ராஜினாமா செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச்சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் அதிமுக ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு வழங்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அவர் திமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், அண்மையில் அவர் திமுக ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளராகப் பதவி வகித்து வந்த கே.பி.சாமி ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலத்துக்கு எதிராக பல ஆண்டுகளாக நாங்கள் அரசியல் செய்து வருகிறோம். இந்நிலையில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி ராஜினாமா செய்து, கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அவரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இதேபோல, நிர்வாகிகள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்” என்றனர்.