மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கடைகளுக்கு முழு கரோனா ஊரடங்கு காலத்துக்கும் வாடகை தள்ளுபடி வழங்க வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நாகர்கோவில் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வரும் நாராயணன் உள்ளிட்டோர் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த 24.3.2020 முதல் 6.9.2020 வரை, உரிமக் கட்டணம் மற்றும் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி, கரோனா ஊரடங்கு காலம் முழுமைக்கும் உரிமக் கட்டணம், வாடகைத் தள்ளுபடி வழங்குமாறு 2021 பிப். 1-ம் தேதி உத்தரவிட்டார். இதற்கு எதிராக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவில், "கரோனாவால் 2020 மார்ச் முதல் செப்டம்பர் வரை யாராலும் பணம் சம்பாதிக்க முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டே, அரசு 2 மாதம் சலுகை வழங்கியுள்ளது. 2020 செப்டம்பர் மாதம் வரை உரிமக் கட்டணம், வாடகை தள்ளுபடி வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவு உறுதி செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்தும், இடைக்கால தடை கோரியும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், "முழு ஊரடங்கு அமலில் இருந்த 2 மாதங்களுக்கான வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையை செப்டம்பர் வரை நீ்ட்டித்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதியிழப்பு ஏற்படும். எனவே, மதுரை அமர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். அதுவரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கரோனா ஊரடங்கு காலத்தில் வியாபாரம் நடத்த முடியாமல் பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சரியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.