அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்துக்கு மூன்றாவது மொழி தேவையில்லை: அமைச்சர் பொன்முடி

ந.முருகவேல்

விழுப்புரம்: தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும். மூன்றாவது மொழி தேவையில்லை என மாநில வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், மும்மொழிக் கொள்கையை ஏற்காதவர்களுக்கு நிதி வழங்க மாட்டோம் என மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "1967-ம் ஆண்டில் அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் உள்ளது. தமிழும், உலக மொழியான ஆங்கிலமும் இருக்கும் போது வேறுமொழி தேவையில்லை. இருமொழிக்கொள்கைதான் தமிழகத்தில் இருக்கும். தமிழக முதல்வரும் தெளிவாகப் பதில் கூறியுள்ளார்" என்றார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் வாராணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர் அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், ‘‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தேசிய கல்வியைக் கொள்கையை ஏற்கும்போது தமிழகம் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.

முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. அதன்பின் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள். இது அவர்களின் தவறு. இதில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.

உண்மையில், தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. அப்படியெனில் தமிழ் மொழிக்கு எதிராக தமிழக அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது.” என்று கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT