தமிழகம்

மதுரை கொள்முதல் நிலையங்களில் குவியும் நெல் மூட்டைகள்: பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

என்.சன்னாசி

மதுரை: கொள்முதல் நிலையங்களில் மலை போன்று குவியும் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் குடோன்களுக்கு எடுத்துச்சென்று பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் மதுரை கிழக்கு மேற்கு வட்டங்களில் தற்போது, அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்,100-க்கும் மேற்பட்ட நெல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. நெல் அறுவடை தொடங்கிய நிலையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் மூட்டைகளை பெறும் கொள்முதல் நிலையங்கள் லாரிகள் மூலம் நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் பாதுகாப்பாக வைக்காமல் திறந்த வெளியில் நீண்ட நாளாக பாதுகாப்பற்ற சூழலில் வைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்பி. இளங்கோவன் கூறியது: பொதுவாக சீசன் நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் உரிய முறையில் பாதுகாப்பது வழக்கம். இம்முறை உரிய நேரத்தில் விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை எடுக்காமல் நுகர்பொருள் வாணிபக் கழகம் தாமதிக்கிறது. மேலும், கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பு இல்லாத திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களில் மலை போன்று குவித்து வைக்கின்றனர்.

இதனால் அறுவடைக்கு பிறகு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய போதிய இடவசதியின்றி காத்திருக்கின்றனர். வெயிலில் காய்ந்தால் எடை குறைதல், ஒருவேளை மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைத்து விவசாயிகள் பாதிக்கும் சூழலும் உள்ளது. விரைந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதுடன் பாதுகாப்பான சூழலை உருவாக்க அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் உடனுக்குடன் குடோன்களுக்கு கொண்டு சென்று பாதுகாக்கவேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தும் நிலை கூட ஏற்படும்.” என்றார்.

அதிகாரியிடம் கேட்டபோது, “மதுரை மாவட்டத்தில் தினமும் 1500 மெட்ரிக் டனுக்கு மேல் நெல் கொள்முதல் செய்கிறோம். ஓரிரு நாள் மட்டுமே அந்த நிலையங்களில் இருப்பு வைக்கிறோம். பிறகு குடோன் மற்றும் மில்லுக்கு உரிய நேரத்தில் அனுப்பி விடுவோம். விவசாயிகளுக்கு நல்லது செய்யவேண்டும், அவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தி செயல்படுகின்றன. தற்போது மழை சீசன் எதுவுமில்லை. வேண்டுமென்றே சில விவசாயிகள் சுய நலத்திற்காக தவறான தகவல்களை விவசாயிகள், மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். இதை அவர்கள் தவிர்க்கவேண்டும்.” என்றார்.

SCROLL FOR NEXT