வானதி சீனிவாசன் | கோப்புப்படம் 
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்கள் 3-வது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி: வானதி சீனிவாசன்

இல.ராஜகோபால்

கோவை: “தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதியாகும்.” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதியாகும். அரசு பள்ளிகளை மேம்படுத்த 'பி.எம்.ஸ்ரீ' என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்' (எஸ்.எஸ்.ஏ) கீழ் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்துக்கான நிதி மட்டும் வேண்டும் என திமுக அரசு கேட்கிறது.

திட்டத்தை செயல்படுத்தினால் தான், சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். இதை வழக்கம்போல திரித்து, மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் செய்து வருகின்றனர். தாய்மொழி, ஆங்கிலம், அதற்கு அடுத்து மாணவர்கள் விரும்பும் மொழி என்று தான் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றுகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கை கூடாது என்கிறது திமுக அரசு. இது, ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல்.

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மும்மொழிக் கொள்கையை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT