திருப்பூர்: அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் இன்று (பிப்.16) காலை அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் 600 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றுள்ளனர். 800 காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.
மாடுபிடி வீரா்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் திருப்பூர் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் திருப்பூர் மாநகர மக்கள் என 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மருத்துவ பரிசோதனையின் போது மாடுபிடி வீரர்களிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பல விஐபிகளின் காளைகள் களம் கண்டுள்ளன.