மதுரை: மார்க்சிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் நேற்று மதுரைக்கு வந்தார். மாநாடு நடைபெறும் தமுக்கம் அரங்கை பிரகாஷ் காரத் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: மதுரையில் ஏப்ரல் 6-ம் தேதியன்று நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடைபெறும்.
இம்மாநாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சு. வெங்கடேசன் எம்பி, மதுக்கூர் ராமலிங்கம், கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது தமுக்கம் அரங்கில் உள்ளாட்சித்துறை சார்பில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், கே.என்.நேரு, பி மூர்த்தி, அர.சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், வி.செந்தில் பாலாஜி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் பிரகாஷ் காரத்தை சந்தித்து பேசினர்.
அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன் (மாநகர்), டி.ராஜேந்திரன் (புறநகர்), மாநிலக் குழு உறுப்பினர்கள் பொன்னுத்தாய், ராஜேந்திரன், பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.