ஓட்டுநர் இல்லாத 2-வது மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில், இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பணிகளையும் 2028-ம் ஆண்டுக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 வழித்தடங்களில் மொத்தம் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு, பூந்தமல்லி பணிமனையில் சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2-வது ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் ஓரிரு நாளில் சென்னைக்கு வர உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், பூந்தமல்லி பணிமனை மற்றும் கோயம்பேட்டில் உள்ள பணிமனையில் குறுகிய தூரம் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, வேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதற்கிடையே, ஓட்டுநர் இல்லாத 2-வது மெட்ரோ ரயில் ஓரிரு நாளில் சென்னைக்கு வர உள்ளது.
ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலை, கலங்கரை விளக்கம் –- பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ் – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர் மட்டப்பாதையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.